மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சேத விவரங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்து 2, 3 நாட்களில் நிவாரணங்களை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 10) அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் சில படகுகள் கடல் நீரில் மூழ்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புயல் காற்றால் மீனவர்களின் படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மீனவர்கள் அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

மாண்டஸ் புயலால் மிகப் பெரிய பாதிப்புகள் இல்லாத அளவிற்கு தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து செயல்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியானதாக தகவல் வந்துள்ளது. அதுபோல் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்த தகவல்களும கிடைத்துள்ளன. இவை முன்னுரிமை கொடுத்து சீரமைக்கப்படும். புயல் பாதிப்புப் பகுதிகளில் மொத்தமாக 205 மையங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டனர். நிவாரண முகாம்களுக்கு வருமாறு அழைத்தவுடன் மக்கள் தயக்கமின்றி வந்தனர். ஏனெனில் அந்த அளவுக்கு அரசு உணவு, மருத்துவம், கழிவறை என அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாக செய்துள்ளது. முகாம்களில் உள்ள 2000 குழந்தைகள் உள்பட அனைவருக்கும் அவர்களின் வீட்டில் கிடைப்பதைவிட அதிக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை காசிமேட்டில் புயல் காற்றால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்த வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் சில படகுகள் கடல் நீரில் மூழ்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீனவர்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கட்டுமரங்கள் முழுமையாக சேதமடைந்திருந்தால் ரூ.32 ஆயிரம் நிவாரணமும், பகுதியாக சேதமடைந்திருந்தால் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். பைபர் படகுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் அவற்றிற்கு ரூ.75 ஆயிரம் நிவாரணமும், பகுதியாக சேதமடைந்திருந்தால் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். இதுபோல் இயந்திரப் படகுகளுக்கு சேதத்திற்கு ஏற்ப நிவாரணத் தொகை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்து 2, 3 நாட்களில் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.