மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி நாக்பூர் ரயில்நிலைத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் . 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் ரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். டெல்லி முதல் வாரணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை முதல் குஜராத் மாநிலம் காந்திநகர் வரை செல்லும் 3ஆவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, இமாச்சலப் பிரதேசம் மாநிலம் உனா மாவட்டம், அம்ப் அண்டவ்ரா ரயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி 4ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும், தமிழ்நாட்டில் சென்னை – கர்நாடகா மாநிலம் மைசூரு இடையே இந்தியாவின் 5ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதியும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி நாக்பூர் ரயில்நிலைத்தில் இருந்து டிசம்பர் 11ஆம் தேதி (இன்று) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். காலை 9.30 மணிக்கு நாக்பூர் ரயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். காலை 10 மணிக்கு சுதந்திர பூங்கா மெட்ரோ நிலையத்தில் இருந்து கப்ரி மெட்ரோ நிலையத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அங்கு, நாக்பூர் மெட்ரோ ரயில் பேஸ் 1-ஐ நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் நாக்பூர் மெட்ரோ ரயிலின் 2ம் கட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 10.45 மணிக்கு நாக்பூர் மற்றும் ஷிரடியை இணைக்கும் சம்ருதி மகாமார்க் முதற்கட்ட நெடுங்சாலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
நாக்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் ரூ.1500 கோடி மதிப்பிலான தேசிய ரயில்வேத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். நாக்பூரில் தேசிய ஒருங்கிணைந்த சுகாதார நிறுவனத்திற்கு (என்ஐஓ) அடிக்கல் நாட்டுகிறார். இதேபோல் நாக்பூர் நதி மாசுக்குறைப்புத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல், சந்திராபூரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பெட்ரோ-ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதுடன், ரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது குறித்த மத்திய ஆராய்ச்சி மையத்தையும் திறந்துவைக்கிறார் பிரதமர். 3.15 மணிக்கு கோவா செல்லும் பிரதமர், அங்கு 9-வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவுவிழாவில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் 3 தேசிய ஆயுர்வேத நிறுவனங்களையும் அவர் திறந்துவைக்கிறார். பின்னர் 5.15 மணிக்கு கோவாவில் மோபா சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார்.