சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திடாதது அநியாயம்: ராமதாஸ்

சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி கையெழுத்திடாதது என்பது அநியாயத்திலும் அநியாயம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு விஸ்வகர்மா சமுதாய மேம்பாட்டு ஆர்வலர்கள் சார்பில் தன்மான நாள் விழா நடைபெற்றது. இதில் சதுப்பேரி பண்டித மார்க்சகாய ஆச்சாரியார் குறித்து சீனந்தல் அடிகளார் -வே ஆனைமுத்து இருவரின் உரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். அதன்பிறகு ராமதாஸ் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சமநிலையற்ற, சமூக நீதியற்ற தமிழகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பிறகும் விஸ்வகர்மா சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற அவலநிலை தான் உள்ளது. விஸ்கர்மா சமுதாயத்துக்கு இடஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும். அதற்கு நான் துணை நிற்பேன். அருந்ததியர்களுக்கு போராடி இடஒதுக்கீடு பெற்று தந்தவன் நான். இஸ்லாமிய சமுதாயத்துக்கும் 7 மாநாடு நடத்தி இடஒதுக்கீடு பெற்று கொடுத்தேன். இடஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என கூறியதால் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இடஒதுக்கீடு வழங்கினார். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்துவேன். சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி எல்லாருக்கும் தேவையானதை கொடுக்க வேண்டும். இதில் பிரச்சனை எதுவும் இருக்காது. தமிழக அரசு மாண்டஸ் புயலை நன்றாக கையாண்டார்கள். ஆன்லைன் ரம்மியை நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி கையெழுத்திடாதது என்பது அநியாயத்திலும் அநியாயம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தற்போதைய கூட்டணியில் தொடருமா? தனித்து போட்டியிடுமா? என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு ராமதாஸ், ‛‛இது இப்போது கேட்கப்பட வேண்டிய கேள்வி இல்லை. தேர்தலுக்கு 3 அல்லது 4 மாதங்கள் இருக்கும்போது கேட்கப்பட வேண்டிய கேள்வி” என்றார்.