குஜராத் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் பூபேந்திர படேல்!

குஜராத் மாநில முதல்வராகத் தொடா்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில், 156 இடங்களில் வென்று, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், குஜராத்தில் தொடா்ந்து 7-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதைத் தொடா்ந்து, மாநிலத்தின் 18-ஆவது முதல்வராகவும், தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக் கொண்டார். காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் நிகழ்வில் ஆளுநா் ஆச்சாா்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, கடந்த 2021, செப்டம்பரில் மாற்றப்பட்டு, அப்பதவி பூபேந்திர படேலுக்கு வழங்கப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக அவா் முதல்வா் பதவியை ஏற்றுள்ளார்.

பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான யோகி ஆதித்யநாத், பசவராஜ் பொம்மை, ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பிஎஸ் தாமி, மாணிக் சஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.