அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் இந்தியா – சீனா படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிராமங்களை ஆக்கிரமிக்கும் சீனா அருணாச்சல பிரதேச எல்லை பகுதியை சீனா கடந்த சில ஆண்டுகளாகவே ஆக்கிரமித்து வருகிறது. அதில், குடியிருப்புகள், சாலைகளை கட்டிய சீனா ஒரு சிறிய நகரத்தையே உருவாக்கி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், சாட்டிலைட் படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர். இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் ஊடுருவலை தடுக்க முயன்ற இந்திய பாதுகாப்பு படையினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதனால் ஏற்பட்ட தாக்கம் இதுவரை குறையவில்லை.
இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்தியா – சீனா ராணுவ படைகள் மெல்ல மெல்ல தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன. இதனை பயன்படுத்தி சீனா இந்திய எல்லை பகுதிகளில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தை போன்றே லடாக்கில் உள்ள இந்திய எல்லையோர கிராமங்களையும் சீனா உரிமை கோரி வருகிறது. குறிப்பாக இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக்கின் பேன்காங் சோ பகுதியிலும் சீனா வேகமாக ராணுவ நகரம் ஒன்றை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. 300-க்கு மேற்பட்ட வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், மோதலுக்கு பிறகு இரு தரப்பு ராணுவத்தினரும் தங்கள் நிலைகளுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 ஆம் தேதி நடந்த இரு தரப்பு மோதல் குறித்த தகவலை 3 நாட்கள் கழித்து தற்போதுதான் பிரபல செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.