அருணாச்சல பிரதேசத்தில் சீனாவுடனான மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு ஏன் தெரிவிக்கவில்லை என மஜ்லிஸ் கட்சித் தலைவரான ஓவைசி எம்.பி. சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தை சீனா தமது நாட்டின் அங்கம் என உரிமை கோரி வருகிறது. இதற்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங் செக்டாரில் கடந்த 9-ந் தேதியன்று சீன ராணுவ வீரர்களுக்கும் நமது ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தவாங் செக்டரில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சித்ததால் இந்த மோதல் வெடித்தது. சீன ராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தி ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. இந்த மோதலில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது என்றும் பின்னர் இரு நாட்டு வீரர்களும் தங்களது பகுதிகளுக்கு திரும்பிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் இந்த ஊடுருவல் மற்றும் தாக்குதல் முயற்சி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி கூறுகையில், இனியும் இந்தியா பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை; இனி சீனாவிடம் நாம் கடுமையாக நடந்துதான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளது.
மஜ்லிஸ் கட்சி எம்.பி. ஓவைசியோ மத்திய பாஜக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், நாடாளுமன்றம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சீனாவின் தாக்குதல், ஊடுருவல் தொடர்பாக ஏன் தெரிவிக்கவில்லை? நாட்டையே இருளில் வைத்திருக்கிறதா பாஜக அரசு? இந்திய வீரர்களது நிலைதான் என்ன? கல்வான் தாக்குதல் போல நடந்ததா? என பல கேள்விகளை எழுப்பி உள்ளார். அத்துடன் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் தர உள்ளதாகவும் ஓவைசி தெரிவித்துள்ளார்.