முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது: கேரளா

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கேரள அரசு நியமித்த தொழில்நுட்பக் குழு சமீபத்தில் தாக்கல் செய்துள்ள வரைவு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்ட கேரள முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் எந்தக் காரணம் கொண்டும் புதிய அணை கட்டக்கூடாது என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் புதிய அணை கட்டும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வு நடத்த கேரள அரசு ஒரு தொழில்நுட்பக் கமிட்டியை அமைத்தது. இந்நிலையில் இந்தக் கமிட்டி ஒரு வரைவு ஆய்வறிக்கையை கேரள அரசிடம் சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் புதிய அணை கட்டுவதால் எந்த விதத்திலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியின் இறுதி அறிக்கை ஒரு மாதத்திற்குள் கேரள நீர்ப்பாசனத் துறையிடம் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரைவு ஆய்வறிக்கைக்கு கேரள அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதை தொடர்ந்து புதிய அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை கேரள அரசு மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பாக தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கேரள தலைமைச் செயலாளர் ஜாய் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், உச்சநீதிமன்ற உயா்மட்ட குழு தெரிவித்ததன் பேரில் இரு மாநில தலைமைச் செயலாளர்களும் நேற்று மாலை ஆலோசனை செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், இருமாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் விவாதித்தால் தீர்வு காண வாய்ப்பு உள்ளது என உச்சநீதிமன்ற உயர்மட்ட குழு கருத்து தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்ற கருத்தின் அடிப்படையில் நேற்று இரு மாநில தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, திட்டப் பணிகள், நிலை நிறுத்தப்பட வேண்டிய 142 அடி நீா்மட்ட உயரம், அணைப் பகுதிக்கு தளவாடப் பொருள்கள் கொண்டு வருவதில் ஏற்படும் இடையூறு போன்றவை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.