ஜல்லிக்கட்டுக்கு எத்தனைத் தடை வந்தாலும் வீரத்துடன் முறியடிப்போம்: கமல்ஹாசன்

ஜல்லிக்கட்டு இந்தாண்டு உறுதியாய் நடக்கும் என தமிழக அரசு கூறியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்பார்த்து வரும் நிலையில் தமிழகத்தின் அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் அதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விசாரணையின் போது விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கடுமையான வாதங்களோடு, புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் தடைகோரிய அமைப்புகளிடம், திரைப்படங்களில் விலங்குகள் பயன்படுத்தப்படுகிறது. அவை காட்சிப்படுத்துவதற்கான விலங்குகளாக இருந்தாலும் இல்லை என்றாலும் அனுமதி பெற்று பயன்படுத்தப்படுகிறது. பீட்டா அதை உறுதி செய்வதற்கான சட்டங்களாக எவை உள்ளது? இத்தகைய விஷயங்களுக்காக மட்டும் தான் அந்த விலங்குகள் பயன்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்டவை எல்லாம் வகுக்கப்பட்டிருக்கிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜல்லிகட்டி போட்டிகள் எப்படி நடக்கும் என்பது தொடர்பாக தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டு நடக்கும் இதற்கு பிறகான விசாரணையில் ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தேதி பிறப்பிக்கப்படாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 2023ஆம் ஆண்டு நடைபெறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் இருந்து கால்நடை பராமரிப்புதுறை தகவலின் அடிப்படையில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொண்டு இருக்கிறோம் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஜல்லிகட்டு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு இந்தாண்டு உறுதியாய் நடக்கும் என தமிழக அரசு கூறியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில், “ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்” என பதிவிட்டுள்ளார்.