டிசம்பர் 24ஆம் தேதி, எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை!

டிசம்பர் 24ஆம் தேதி, எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை செலுத்தப்பட உள்ளது.

அதிமுக உட்கட்சி மோதல் முடிவை எட்ட முடியாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் தொண்டர்கள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். இரு தரப்பும் ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் சசிகலாவும், டிடிவி தினகரனும் தங்கள் ஆதரவாளர்களோடு அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவு தினத்தை தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு தினம் அணுசரிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வுக்கும் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக அஞ்சலி செலுத்த திட்டமிட்டு வருகின்றனர். டிசம்பர் 24ஆம் தேதி, எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மரியாதை செலுத்தப்பட உள்ளது என்று அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

அதிமுக நிறுவன தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், கடந்த 1987-ம் ஆண்டு டிச.24-ம்தேதி மறைந்தார். அவரது 35-வதுஆண்டு நினைவுநாளை முன்னிட்டு டிச.24-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்துகின்றனர். இதையடுத்து, எம்ஜிஆர் நினைவிட நுழைவுவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.