மகாராஷ்டிரா -கர்நாடகா எல்லை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை, இரு மாநில அரசுகளும் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்காமல், அமைதி காக்கும்படி, முதலமைச்சர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுரை வழங்கி உள்ளார்.
கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவிக்கு இரு மாநிலங்களும் பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடுகின்றன. பெலகாவி, தற்போது கர்நாடகா வசம் இருந்தாலும், அடிக்கடி இரு மாநில எல்லை பகுதிகளில் தகராறு ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிர மாநிலத்திற்கு சென்ற கர்நாடக மாநில அரசு பேருந்துகள் மீது, அம்மாநிலத்தினர் சிலர் கற்கள் வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், இரு மாநில போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, “மகாராஷ்டிர மாநிலத்திற்கு தான் பெலகாவி சொந்தம்” என, அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கருத்துத் தெரிவித்தது, பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இரு மாநில எல்லை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா – கர்நாடகா எல்லை விவகாரம் தொடர்பாக, டெல்லியில், பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மகாராஷ்டிரா – கர்நாடகா மாநில எல்லைப் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரை, கருத்து தெரிவிக்க மாட்டோம் என, இரண்டு மாநில முதலமைச்சர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்படும். இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம். பெலகாவியில் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கவனிக்க ஒரு மூத்த காவல் துறை அதிகாரி நியமிக்கப்படுவார். இதனால் இரு மாநிலங்களில் இருந்தும் பயணிகள் மற்றும் வணிகர்கள் எந்த பிரச்னையும் சந்திக்க மாட்டார்கள். சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.