140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா பிபா கால்பந்து உலகக்கோப்பைக்கு தகுதிகூட பெறவில்லை என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்து உள்ளார்.
உலகின் தலைசிறந்த விளையாட்டு திருவிழாவான பிபா உலகக்கோப்பை 2022 கால்பந்து தொடர் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி அரேபிய நாடான கத்தாரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 18 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் இந்த தொடரில் விளையாட தகுதிபெற்ற சர்வதேச அணிகள் கத்தாருக்கு சென்று விளையாடி வருகின்றன. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து முடிந்து குரூப் சுற்று போட்டிகளுக்கு 32 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. குரூப் ஏ முதல் குரூப் எச் வரை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு உலக கால்பந்து அணிகள் இதில் விளையாடி வந்தனன. குரூப் ஏவில் கத்தார், ஈகுவடா, செனெகல், நெதர்லாந்து அணிகளும் இடம்பெற்றன. குரூப் சுற்று பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் அணிகளும், சி பிரிவில் அர்ஜென்டினா, சவூதி அரேபியா, மெக்சிகோ, போலந்து அணிகளும், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனீசியா அணிகள் டி பிரிவிலும், குரூப் இ-யில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான் அணிகளும் இடம்பெற்றன. குரூப் எப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரேஷியா ஆகிய அணிகளும், ஜி குரூப்பில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் ஆகிய அணிகளும், போர்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய அணிகள் எச் பிரிவிலும் இடம்பெற்று இருந்தனர்.
குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 16 சுற்றுக்கு ஒரு குழுவில் இருந்து 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் நெதர்லாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போலந்து, இங்கிலாந்து, செனகல், ஜப்பான், குரேஷியா, பிரேசில், தென் கொரியா, மொராக்கோ, ஸ்பெயின், போர்சுகல், சுவிட்சர்லாந்து ஆகிய 16 அணிகள் சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் குரோஷியா, பிரான்ஸ், பிரேசில், அர்ஜெண்டினா, இங்கிலாந்து, மொராக்கோ, போர்ச்சுகல், நெதர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி அடைந்தன. இதில் மொராக்கோ, அர்ஜெண்டினா, குரோஷியா, பிரான்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் 2 வது அரையிறுதியில் மொராக்கோ, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி அர்ஜெண்டினாவுடன் இறுதி போட்டியில் மோதும்.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், “3.7 கோடி மக்கள் தொகை கொண்ட மொராக்கோ பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும் நிலையில் 140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா உலகக்கோப்பைக்கு தகுதிகூட பெறவில்லை. இது அவமானம்” என்று தெரிவித்து உள்ளார்.