முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

கச்சத்தீவை தாரை வார்த்தது போல், முல்லைப் பெரியாறு அணையின் தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு தாரை வார்த்து விடுமோ என்ற அச்சம் விவசாயிடத்திலே ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தென் தமிழகத்தின் ஜீவாதார வாழ்வாதாரமாக இருக்கிற முல்லைப் பெரியாறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள ஒரு கோடி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஜீவாதாரமாக விளங்குவது. 999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்த அடிப்படையில், அணையின் பராமரிப்பு உள்ளிட்டஅனைத்து கட்டுப்பாடுகளும் தமிழக அரசின் வசமே இருந்தன. அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணையை பயன்படுத்துவதற்காக ஆண்டுதோறும் குத்தகத் தொகையை தமிழக அரசால் கேரள அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்த பின்பு தமிழக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் தான் கேரள மாநிலத்திற்கு நீர் திறக்கப்பட்டது நம் வழக்கமாக கொண்டுள்ள நடைமுறை ஆகும். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஆண்டு கேரளா அமைச்சர்களே நீர் திறந்து வைத்த சம்பவம் ஒரு பேரதிர்ச்சியை உருவாக்கியது.

நீதிமன்ற உத்தரவு காரணமாக தற்காலிகமாக 142 அடியாக நீர் திறக்கப்படுகிறது. அணையை பலப்படுத்திய பின்பு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவுக்கு துணை போவது போல் அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்த போது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர் தமிழக பொதுப்பணிth துறையினர். முல்லைப் பெரியாறு அணை கட்டி 120 ஆண்டுகள் ஆன நிலையில் தமிழகம் சார்பில் யாராவது ஒரு அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ அல்லது தேனி மாவட்ட ஆட்சித் தலைவரோ அல்லது அனைவரும் இணைந்து தான் இதுவரை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்து வைத்துள்ளார்கள். முல்லைப் பெரியாறு அணை வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழகத்தின் சார்பில் எந்த ஒரு மக்கள் பிரதிநிதிகளோ அல்லது தமிழக அதிகாரிகளோ இல்லாமல் கேரள அரசு தன்னிச்சையாக நீரை திறந்து இருப்பது பேரதிர்ச்சியை விவசாயிகள் இடத்தில் ஏற்படுத்தி இருப்பதை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

999 ஆண்டு கால குத்தகை அடிப்படையிலே முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு அனைத்து உரிமைகளும் உள்ள நிலையில், கேரளாவின் நீர் பாசனத் துறை அமைச்சர் 29.10.2021ஆம் தேதி காலை நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். அப்போது தமிழக முதலமைச்சர் மௌனம் சாதித்தார். கச்சத்தீவை தாரை வார்த்தது போல் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு இருந்த உரிமைகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு தாரை பார்த்து விடுமோ ஒரு அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி தாரைவார்த்து விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் முல்லைப் பெரியாறை நம்பி இருக்கும் இந்த ஐந்து மாவட்ட விவசாய பூமி, இந்த பொன்மொழிகிற பூமி பாலைவனமாக காட்சியளித்து விடுமோ என்று கண்ணீரோடு கவலையோடு அரசின் கவனத்திலே எடுத்துச் சொல்கிறோம். ஆகவே அணையின் நீர்மட்டம் கூடிய விரைவிலே 142 அடியை எட்ட உள்ள நிலையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி, அதை நீண்ட நாட்களுக்கு நிலை நிறுத்தி தமிழகத்தின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.