ராகுல்காந்தி நாட்டிற்கு பெரும் அவமானமாக மாறியுள்ளார் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கடும் விமர்சனம் செய்துள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சீனா போருக்கு தயாராகும்போது இந்தியா தூங்கிக்கொண்டிருக்கிறது. அச்சுறுத்தலை மத்திய அரசு தவிர்த்து வருகிறது. 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துக்கொண்டது. 20 இந்திய வீரர்களை கொன்றுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் நமது வீரர்களை சீனா தாக்கியுள்ளது’ என்றார்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் கருத்துக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிரண் ரிஜிஜூ டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ராகுல்காந்தி இந்திய ராணுவத்தை அவமதித்தது மட்டுமின்றி நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கிறது. ராகுல்காந்தி காங்கிரசுக்கு மட்டும் பிரச்சினை அல்ல.. அவர் நாட்டிற்கும் மிகப்பெரிய அவமானம். இந்திய ராணுவத்தை நினைத்து மக்கள் பெருமைபடுகின்றனர்’ என்றார்
ராகுல்காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில், சீனாவுடன் நெருக்கம் உள்ளதாக ராகுல்காந்தி உணர்கிறார். சீனா என்ன செய்யும் என்பதை அறியும் அளவிற்கு அவர் நெருக்கம் வைத்துள்ளார். இந்திய பாதுகாப்பு மற்றும் எல்லை பகுதி குறித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும், இந்திய வீரர்களின் துணிவை குறைக்கும் வகையிலும் ராகுல்காந்தி கருத்து தெரிவித்து வருகிறார். ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தா நேருவின் இந்தியா இதுவல்ல. (1962 இந்தியா-சீனா மோதலை மேற்கோள்காட்டி) தூங்கிக்கொண்டிருந்தபோது 37 ஆயிரத்து 242 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இழந்தது யார்?. தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள ராகுல்காந்தி தேசிய பாதுகாப்பு குறித்து பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து நிதி பெற்றுள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது எண்ணற்ற பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது’ என்றார்.