தி.மு.க. அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு, மக்கள் விரோத அரசு, ஏழைகளுக்கு எதிரான அரசு என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள். மக்கள்படும் துன்பம் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திவிடும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெட்ரோல் விலை குறைக்கப்படும், டீசல் விலை குறைக்கப்படும், மின் கட்டணம் குறைக்கப்படும், சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது, ரேஷன் கடைகளில் கூடுதலாக சர்க்கரை வழங்கப்படும், உளுத்தம் பருப்பு வழங்கப்படும், எரிவாயு உருளைக்கு மானியம் வழங்கப்படும், கல்விக் கடன் ரத்து செய்யப்படும், நகைக் கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும், மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க., கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அனைத்துக் கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தியதோடு ஆவின் நெய் விலையை மூன்றாவது முறையாக் உயர்த்தியுள்ளதைப் பார்க்கும்போது “உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா?” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துவிட்டு, ஒன்றரை ஆண்டுகளில் பால் பொருட்களின் விலை அனைத்தையும் பன்மடங்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி ஏழையெளிய மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியது தி.மு.க. அரசு. இவையெல்லாம் போதாதென்று, தற்போது ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் ரூ.515 இருந்த ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை ரூ.535 உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூலை மாதம் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்று சொல்லி, ரூ.535-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ நெய்யின் விலையை ரூ.580 ரூபாயாக இரண்டாவது முறை உயர்த்தியது. தற்போது மூன்றாவது முறையாக ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை ரூ.580 இருந்து 630-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது 515 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சாதாரண நெய்யின் விலை தற்போது 630 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது, நெய்யின் விலை சுமார் 23 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது போதாது என்று வெண்ணெயின் விலையையும் கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது தி.மு.க. அரசு.
தொடர்ந்து மக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை சுமத்திக் கொண்டேயிருக்கின்ற தி.மு.க. அரசின் மக்கள் விரோதச் செயல்பாட்டிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விலை உயர்வின்மூலம் ஏழையெளிய மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் தின்பண்டங்களின் விலையும் அதிகரிக்கும். மொத்தத்தில், பொதுமக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கி வருகிறது. தி.மு.க.வின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளைப் பார்த்து ‘உபகாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமலிருந்தால் சரி’ என்ற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.
தி.மு.க. அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு, மக்கள் விரோத அரசு, ஏழைகளுக்கு எதிரான அரசு என்பதை கடந்த ஒன்றரை ஆண்டு கால அனுபவத்தில் மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள். மக்களை அரவணைத்துப் பேணி காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், மக்கள்படும் துன்பம் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.