ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆளுநர் ரவி இந்தியக் குடிமைப்பணிக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தனது பணிக்காலம் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி அவர் இந்தியக் குடிமைப்பணிக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். “எண்ணித் துணிக” என்ற தலைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் இந்தியக் குடிமைப் பணிகளுக்குத் தேர்வுகள் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி கூறியதாவது:-
நான் மின்சாரம் இல்லாத சாலைகள் ஒழுங்காக இல்லாத ஊரில் தான் பிறந்து வளர்ந்தேன். பள்ளிக்கு கூட எட்டு கிமீ நடந்து செல்ல வேண்டிய சூழலே இருந்தது. முதுநிலை படிப்பு படிக்கும் வரை கூட ஹாஸ்டல் ரூமில் மின்விசிறி இருந்ததில்லை. ஆனால், அதெல்லாம் அப்போது எனக்குக் கடினமாகத் தெரிந்தது இல்லை. அனைவரும் தங்களைக் கனவை நிறைவேற்றத் தொடர்ந்து படிக்க வேண்டும். தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை எதற்குக் கொண்டு வந்தது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. அப்படி வேகமாக மாறும் உலகத்திற்கு ஏற்ப பாடத் திட்டங்களை மாற்ற வேண்டியது அவசியமாகிறது. படித்து முடித்தால் வெறும் பட்டங்களுக்கு மட்டும் இப்போதெல்லாம் வேலை கிடைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் செயல்திறன், அறிவுத்திறன், சிந்தனை என அனைத்தையும் டெஸ்ட் செய்தே வேலை தருகிறார்கள். இதற்கு புதிய கல்விக் கொள்கை நிச்சயம் உதவும்.
பாகிஸ்தான் நமது பொருளாதாரத்தைக் குலைக்க நினைத்து பயங்கரத்தைக் கையில் எடுத்தார்கள். ஆனால், நாம் வளர்ச்சியைத் தேர்ந்தெடுத்தோம். இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பு வரை நமது பல கோரிக்கைகளுக்கு அமெரிக்கா செவிசாய்க்கவில்லை. ஆனால், இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு தான், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அமெரிக்கா புரிந்து கொண்டது. நமக்கு ஒத்துழைப்பை அளிக்கத் தொடங்கினார்கள். இதுபோன்ற சர்வதேச ஒத்துழைப்பைப் பெற மிகப் பெரியளவிலான உழைப்பு நமக்குத் தேவை. 20 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகள் இந்தியாவை முக்கிய நாடாகக் கருதவில்லை. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்தியா கூறும் ஒவ்வொரு கருத்தும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஐநா சபையை விட அதிக பலம் வாய்ந்த ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இப்போது ஒட்டுமொத்த உலகத்திற்கே வழிகாட்டும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
முன்பெல்லாம் பெண்கள் வேலை செய்யும் இடங்கள் பாதுகாப்பானதாக இருந்ததில்லை. உள்துறை அமைச்சக கட்டிடத்திலேயே 30 ஆண்டுகள் முன்பு பெண்களுக்குத் தனியாகக் கழிப்பறை இல்லை. அப்போது பெண்கள் பணிக்குச் செல்வதே பாதுகாப்பு இல்லை என்ற சூழலே இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறியுள்ளது. முன்பு தனி நாடு கேட்ட நாகா இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். எந்த காவலும் இல்லாமல், அவர்களுடனேயே இருந்தேன். எனது கடும் உழைப்பிற்கு அதன் பிறகு பலன் கிடைக்கத் தொடங்கியது. அவர்கள் தங்கள் கோரிக்கையைக் கைவிட்டனர்.
குடிமைப் பணிக்குத் தயாராகும் நபர்கள் குறைந்தது 13 முதல் 14 மணி நேரத்தை அதற்கு ஒதுக்க வேண்டும். அதிக கவனம் செலுத்த வேண்டிய பாடங்களுக்குக் கூடுதல் நேரத்தை ஒதுக்குங்கள். படிப்பது மட்டுமே போதாது. படிப்பதை எழுதிப் பாருங்கள்.. கற்றதைச் செயல்படுத்திப் பாருங்கள். செய்ய வேண்டியதை உரிய நேரத்தில் செய்யுங்கள்.ஏனென்றால் குடிமைப் பணியாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள். சில நேரங்களில் தவறான முடிவுகளையும் எடுத்து விடலாம். நான் கூட சில நேரங்களில் தவறான முடிவை எடுத்துள்ளேன். ஆனால், முடிவெடுக்காமல் இருக்கக் கூடாது. அப்போது தகுதியற்றவராகிவிடுவீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.