என் சொத்து விவரங்களை விரைவில் வெளியிடுவேன். தி.மு.க. தலைவர்கள் வெளியிட தயாரா?’, என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை அணிந்துள்ள வாட்ச் பேசுபொருளாகியுள்ள நிலையில், நேற்று பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில் ‘சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் இது குறித்து அவர் விளக்கமாகப் பேசினார். சென்னை கீழ்பாக்கத்தில் பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில் ‘சமத்துவ கிறிஸ்துமஸ் விழா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:-
பாஜக சார்பில் இப்போது முதல்முறையாகச் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடத்தப்படுகிறது. 1940 முதல் ஏதோ சில காரணங்களால் அரசியலும் , மதமும் கலந்துவிட்டது. மத அடிப்படையில் நமது நாட்டை கிழக்கிந்திய கம்பெனி பிரித்தது. அப்படி மத அடிப்படையில் பெங்கால் மாநிலத்தைப் பிரிக்க ஷியாம பிரசாத் முகர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட ஜன சங்கத்தின் முதல் தலைவரே கிறிஸ்தவர் தான். அவர் தான் வி.கே ஜான். மதச்சார்பின்மை அவசர நிலை அமலில் இருந்த போது, நமத அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை என்ற புதிய வார்த்தையைக் கொண்டு வந்தார்கள். மதச்சார்பின்மை என்றால் என்ன? அனைவரும் தங்கள் மத வழக்கத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றுவதே மதச்சார்பின்மை. சில அரசியல்வாதிகள் ஓட்டுக்காகவும் , போட்டோவுக்காகவும் இப்தார் போன்ற விருந்தில் கலந்து கொள்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களுக்குப் பின்னரே, இந்தியாவில் மத அரசியல் தொடங்கியது. நானும் இப்தாரில் கலந்து கொண்டேன். ஆனால் வாக்குக்காக நடிக்கவில்லை.
பாஜகவில் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். யார் மீதும் நாங்கள் மதத்தைத் திணிக்க மாட்டோம். முத்தலாக் ரத்து சட்டம் கொண்டு வந்த போது, பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றார்கள். ஆனால் பாகிஸ்தான் 1961ஆம் ஆண்டிலேயே முத்தலாக்கை நீக்கிவிட்டார்கள். , ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் எனப் பல நாடுகளில் முத்தலாக் தடை செய்யப்பட்டது. முத்தலாக்கை நீக்கிய 23ஆவது நாடுதான் இந்தியா. ஆனால், இவை குறித்தெல்லாம் இங்கிருப்பவர்களுக்குப் புரிதல் இல்லை. உலகில் நடப்பது அவர்களுக்குப் புரிவதில்லை. பாஜக குறித்துத் தொடர்ந்து பொய்களைப் பரப்பினார்கள். அதைக் களை எடுத்து வருகிறோம்.
வரும் 2024 தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மிகப் பெரிய ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். நான் மக்கள் பிரதிநிதி இல்லை. கவுன்சிலராகவே, ஊராட்சி மன்ற தலைவரோ, சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லை. அரசிடம் இருந்து ஒரு ரூபாயைக் கூட நான் வருமானம் பெறவில்லை. ஆனாலும், திமுக என்னிடம் நான் அணியும் வாட்ச் குறித்து கேட்கிறது. இதற்காகத் தான் நான் 1.5 ஆண்டுகள் காத்திருந்தேன். யாரும் செய்யாத ஒன்று இந்திய அரசியலில் எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத ஒரு விஷயத்தை நான் செய்ய உள்ளேன். மிக விரைவில் நான் தமிழகம் முழுக்க நடைப்பயணம் செல்ல உள்ளேன். மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லப் போகிறேன். அதன் முதல் நாள், நான் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வான 2010-11ஆம் ஆண்டு முதல் எனது வங்கிக்கணக்கு நிதி விவரங்களை வெளியிடுகிறேன். கடந்த 13 ஆண்டுகளில் எனக்குக் கிடைத்த வருமானம், நான் செய்த செலவு என அனைத்தும் அதில் இருக்கும். நான் செய்த சின்ன செலவும் அதில் இருக்கும்.
எனது மனைவி என்னைக் காட்டிலும் 7 மடங்கு அதிகம் சம்பளம் பெறுகிறார். அது குறித்த தகவல்களையும் வெளியிடப் போகிறேன். பாஜக மாநில தலைவரான பிறகு, எனது மனைவியுடன் நான் பொது இடங்களுக்குச் செல்வதில்லை. குடும்ப திருமணங்களுக்குக் கூட நாங்கள் ஒன்றாகச் செல்வதில்லை. அரசியலில் என் மீது வீசப்படும் சேறு, அவர் மீது படக்கூடாது என்பதே இதற்குக் காரணம். தேர்தல் ஆணையம் கேட்கும் 10% தகவல்களை விட நான் 100% தகவல்களைத் தருகிறேன்.
போலீஸ் அதிகாரியாக இருந்த போதே, ரபேல் விமானம் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று நினைத்தவன் நான். ரபேல் விமானங்கள் குறித்துப் பல கூட்டங்களில் பேசியுள்ளேன். இதன் காரணமாகவே நான் ரபேல் நிறுவன கடிகாரத்தை அணிந்துள்ளேன். திமுக செய்யும் குடும்ப அரசியலை முழுமையாக எதிர்க்கும் நான், எனது முழு குடும்ப சொத்து விவகாரங்களை வெளியிடப் போகிறேன். எனது வருமானம் மட்டுமின்றி.. அப்பா, அம்மா, உடன் பிறந்தோர், மனைவி என அனைவரது வங்கிக் கணக்குகளையும் வெளியிடப் போகிறேன். இதேபோல அவர்களால் செய்ய முடியுமா. இவ்வாறு அவர் பேசினார்.