விவசாயிகளுக்கு தேவையான உரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்ட பயிர்கள் மழையால் சேதமுற்றதாலும், சில பகுதிகளில் ஆறு, ஏரி, குளங்களை நம்பி பயிரிடப்பட்ட பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகுவதாலும் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். எனவே அரசு, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். மேலும் நெல் சாகுபடிக்கு தற்சமயம் யூரியா உரம் தெளிக்கும் சூழ்நிலையில் சில இடங்களில் உரத்தட்டுப்பாடு இருப்பதால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். எனவே விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் தென்னை விவசாயிகளிடம் அரசே, தேங்காயை நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் அல்லது தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற வறட்சியான மாவட்டப் பகுதிகளில் மானாவாரி பயிராக நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அரசே, கடலையை நேரடி கொள்முதல் செய்யவோ அல்லது கடலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யவோ முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.