மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் காலமானார்!

மதுரை மாநகராட்சியின் முன்னாள் அதிமுக மேயர் பட்டுராஜன் வயது மூப்பு காரணமாக காலமானார்.

மதுரை மாநகராட்சியின் மூன்றாவது மேயர் என்ற பெருமையை கொண்ட அதிமுக பிரமுக பட்டுராஜன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85. எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய காலம் தொட்டு அவருடன் இணைந்து பயணித்த பட்டுராஜனுக்கு 1982ஆம் முதல் 1984ஆம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சி மேயராக பணியாற்றக் கூடிய வாய்ப்பை வழங்கினார் எம்.ஜி.ஆர். இவரும் தன் மீதான எம்.ஜி.ஆரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயலாற்றினார். பட்டுராஜனை பொறுத்தவரை வழக்கறிஞராக இருந்து அரசியலுக்குள் வந்தவர் என்றாலும் அனைவரிடத்திலும் பண்பாக நடந்துக் கொள்ளக்கூடியவர். எம்.ஜி.ஆர். காலத்துக்கு பிறகு அதிமுகவில் அவருக்கான முக்கியத்துவம் குறைந்ததை தொடர்ந்து வழக்கறிஞர் பணியை மட்டும் கவனித்து வந்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞராக இருந்த இவர் அதிமுக நிகழ்ச்சிகளில் தலைக்காட்டுவதை தவிர்த்து வந்தார்.

இதனிடையே பட்டுராஜன் மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஓரளவு மரியாதை வைத்திருந்ததன் காரணமாக அவ்வப்போது அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். கடந்த சில வருடங்களாக வயது முப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்து வந்த இவர் நேற்று காலமானார். மதுரை சின்ன சொக்கிக்குளம் பகுதியில் உள்ள பட்டுராஜன் இல்லத்துக்கு சென்ற அதிமுக முக்கியப் பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.