கேரளா மாணவியின் சாவுக்கு காரணம் ஷிகெல்லா வைரஸ்!

கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு பிளஸ் 1 மாணவி பலியானதற்கு ஷிகெல்லா வைரஸ்தான் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், காசர்கோடு அருகே செறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவநந்தா (16). பிளஸ் 1 மாணவி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் மரணமடைந்தார். அதே ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மரணமடைந்த தேவநந்தாவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில், ‘தேவநந்தாவின் மரணத்திற்கு ஷிகெல்லா வைரஸ்தான் காரணம்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து காசர்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ராம்தாஸ் கூறுகையில், ‘பொதுவாக அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களில் தான் இந்த வைரஸ் வேகமாக பரவும். ஷவர்மா சாப்பிட்ட மேலும் 3 மாணவிகளுக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.