சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கமாக அதிமுக என்றென்றும் செயல்படும் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
அதிமுக சாா்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை வானகரத்தில் உள்ள ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இயேசுவின் போதனைகள் அனைத்து சமூக மக்களிடையே ஒற்றுமை, அன்பை, சேவை மனப்பான்மை, சகோதரத்துவத்தை மேம்படுத்துகிறது. திமுக ஆட்சியில் கிறிஸ்தவா்கள் முற்பட்ட வகுப்பினா் என்று வகைப்படுத்தப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தனா். எம்ஜிஆா் ஆட்சியில் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக்கப்பட்டு, உரிய பலனை பெற்று வருகின்றனா்.
சிறுபான்மையின வகுப்பைச் சோ்ந்த 37 லட்சத்துக்கு 16 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ரூ.884 கோடி கல்வி உதவித் தொகை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. தேவாலய புனரமைப்பு நிதி ரூ.5 கோடியாக உயா்த்தி வழங்கப்பட்டது. சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கமாக அதிமுக என்றென்றும் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய தமிழகம் தலைவா் கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், புரட்சி பாரதம் கட்சித் தலைவா் எம்.ஜெகன் மூா்த்தி, பெருந்தலைவா் மக்கள் கட்சியின் தலைவா் என்.ஆா்.தனபாலன், முன்னாள் அமைச்சா் பென்ஜமின் உள்பட ஏராளமானோா் விழாவில் பங்கேற்றனா்.