அ.தி.மு.க. வேட்பாளர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

கரூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி பதவிகளை அராஜகமாக பறிப்பதா? என கேள்வி எழுப்பினார்.

தங்களுடைய அரசியல் ஆசை, அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள, எந்த அடாத செயலிலும் ஈடுபடலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளது தி.மு.க. அரசு. கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற 12 மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் பதவிகளில், 9 இடங்களில் அ.தி.மு.க.வும், 3 இடங்களில் தி.மு.க.வும் வெற்றி பெற்றன. மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கண்ணதாசனும், துணைத்தலைவராக தானேஷ் முத்துகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தானேஷ் முத்துக்குமார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் 6 முறை தள்ளிப்போன துணைத்தலைவர் தேர்தலை, உடனடியாக நடத்த கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு, ஐகோர்ட்டும் துணைத்தலைவர் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தி, சீலிடப்பட்ட வாக்குப்பெட்டிகளை ஐகோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த 19-ந் தேதி (நேற்று முன்தினம்) நடைபெற இருந்த துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவிகாவை ஜனநாயக முறையில் வெல்ல முடியாது என்பதால், திருவிகா மற்றும் அவருடன் பயணம் செய்த கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கார் மீது இரும்புக்கம்பியால் தாக்கி, கண்ணாடியை உடைத்து, கவுன்சிலரின் முகத்தை துணியால் மூடி காரில் இருந்து கடத்தி சென்றுள்ளனர். மேலும், அந்த காரில் அமர்ந்திருந்தவர்கள் மீது திராவகத்தை வீசி ஒரு கொடும் கலவரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். திருவிகாவை இந்த அரசு பிறப்பிக்கப்படாத ஆள்தூக்கி சட்டத்தில் கரூர் மாவட்ட தி.மு.க.வினர், கூலிப்படையினரை வைத்து கடத்தி சென்றிருக்கிறார்கள். ஆளும் கட்சி என்ற மமதையிலும், தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற திமிரிலும், இறுமாப்பிலும் கூலிப்படையினரை ஏவிவிட்டு, கரூர் மாவட்ட முக்கிய தி.மு.க. நிர்வாகிகள் கோரத்தாண்டவம் ஆடி இருக்கிறார்கள்.

இந்த அராஜகம் குறித்து கடத்தப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் திருவிகாவின் மகன் அளித்த புகாரை, கரூர் மாவட்ட போலீசார் வாங்க மறுத்துள்ளனர். பின்னர், இது குறித்து அனைத்து காட்சி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நேரடியாக செய்திகள் ஒளிபரப்பப்பட்டவுடன், வேறு வழியின்றி வேடசந்தூர் போலீசார் ஒப்புக்கு ஒரு புகாரை பெற்றுக்கொண்டனர். முதல் தகவல் அறிக்கை ஒன்றை பதிவு செய்த போலீசார், இதுவரை கடத்தலில் ஈடுபட்ட எந்த ஒரு தி.மு.க. கூலிப்படையினரையும், ரவுடிகளையும் கைது செய்யவில்லை. மேலும், அவர்கள் அனைவரையும் தப்பிக்கவிட்டு கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் விநோதம் இந்த தி.மு.க. ஆட்சியில் தான் நடைபெறுகிறது.

இதேபோன்று, கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்க சென்ற அ.தி.மு.க. கவுன்சிலர்களை, தேர்தல் நடைபெறும் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லவிடாமல், போலீசாரே தி.மு.க. நிர்வாகிகளை போல் தடுத்த அவலமும் அரங்கேறி உள்ளது. மேலும், சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவிற்கு மாறாக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட, மாவட்ட பெண் கவுன்சிலர் ஒருவர், தான் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர், இப்படி தேர்தல் முடிவை அறிவிப்பதற்கு காரணமான அதிகாரிகள் மீது கோர்ட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கான சட்ட ரீதியான முயற்சிகள் அ.தி.மு.க.வின் சார்பில் எடுக்கப்படும். மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பாக கருதப்பட வேண்டிய உள்ளாட்சி பதவிகளை, பணம் காய்ச்சி மரமாக கருதி அவைகளை அராஜகமாக பறிக்க, எழுதப்படாத ஆள் தூக்கி சட்டத்தை தி.மு.க. அரசு கையாண்டு உள்ளதை அ.தி.மு.க. சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.