ஒரு எம்எல்ஏ எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அந்த அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன்: விஷால்

ஒரு எம்எல்ஏ எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அந்த அளவுக்கு நான் என் படங்கள் மூலம் சம்பாதிக்கிறேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் திருப்பதியில் இரு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். விஷால் கூறியதாவது:-

என்னை பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. நான் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டியிட போகிறேன் என்ற தகவல் உலா வருகிறது. அந்த செய்தி உண்மையானதல்ல. ஒரு எம்எல்ஏ என்ன சம்பாதிக்கிறாரோ அதைவிட நான் அதிகமாகவே என் படங்களில் சம்பாதிக்கிறேன். ஒரு எம்எல்ஏவுக்கு இருக்கும் பெயர், புகழைவிட எனக்கு அதிகமாகவே இருக்கிறது. இப்போதைக்கு அரசியலுக்கு வரும் ஆர்வம் எனக்கு இல்லை. ஒரு வேளை வந்தாலும் ஆந்திராவில் வரமாட்டேன்.

ஜெகன்மோகன் ரெட்டி 3,500 கிலோமீட்டர் பாதயாத்திரை செய்த போதே அவர்தான் வெற்றி பெற்று முதல்வராக போகிறார் என தேர்தலுக்கு ஓராண்டு முன்பே நான் தெரிவித்திருந்தேன். இப்போது அவரை நேரில் சந்தித்தேன். இந்த சந்திப்பை வைத்துதான் நான் குப்பம் தொகுதியில் போட்டியிட போவதாக வதந்திகளை சிலர் கிளப்புகிறார்கள். ஜெகன் மோகன் ரெட்டியை எனக்கு மிகவும் பிடிக்கும். சாதாரண சமூகசேவை செய்யும் எல்லோருமே அரசியலில் இருப்பவர்கள்தான். தேர்தலில் போட்டியிட்டு கட்சியில் இருப்பவர்கள் மட்டுமே அரசியல்வாதிகள் என்று அர்த்தம் கிடையாது. இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.