தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்குத் தீர்வு காணப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி உள்ளிட்ட மத்திய பொறியியல்-தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு ஜேஇஇ தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2023 – 24 ஆம் கல்வியாண்டில் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு இரண்டு முறை நடத்தப்படவிருக்கிறது. முதல் முறை ஜனவரியிலும், இரண்டாவது தேர்வு ஏப்ரலிலும் நடைபெறும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படவிருக்கிறது. தேசிய தேர்வு முகமை இதனை நடத்துகிறது.
இந்நிலையில் வருகிற 2023 ஜனவரி மாதத்திற்கான ஜேஇஇ தேர்வு குறித்த அறிவிக்கை வெளியாகியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 12 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை என்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கொரோனா காலத்தில் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டதால், மதிப்பெண்கள் குறிப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ‘தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்குத் தீர்வு காணப்படும். இதுகுறித்து தேசிய தேர்வு முகமையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பதிவிட விலக்கு அளிக்கக்கோரி வலியுறுத்தியுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது 10-ம் வகுப்பு மதிப்பெண் அல்லது தரநிலை கேட்கப்படுகிறது. ஆனால் நம் மாணவர்கள் அதை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். கொரோனா தொற்று அவசர நிலையை மனதில் கொண்டு, தமிழ்நாட்டு மாணவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை பூர்த்தி செய்யாமலேயே விண்ணப்பிக்கும் வசதி வேண்டும் என்று தேசிய தேர்வு முகமையிடம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்திருக்கிறது. தேசிய தேர்வு முகமையும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளது. எனவே ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றம் அடையாமல் தேர்வுக்கு தயாராகலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.