மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்திருக்கிறார். இதனால் பயன் ஏற்படாது. இலங்கையை கண்டிப்பதும், எச்சரிப்பதும் தான் இத்தகைய அத்துமீறல்களை தடுத்து நிறுத்தும். இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.