சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என மருத்துவர்களிடம் கூறியதே ஜெயலலிதா தான் என்று சசிகலா தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என தொடர்ந்து கூறிவரும் சசிகலா, அந்த பெயரிலேயே அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். ஓபிஎஸ் ஒரு பக்கம், இபிஎஸ் ஒரு பக்கம், சசிகலா ஒரு பக்கம் என ஆளுக்கொரு திசையில் நின்று அதிமுக தங்கள் பின்னால் தான் உள்ளது என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் சசிகலா கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. ஒருவரை எதிர்க்க வேண்டும் என்றால் நேருக்கு நேர் நின்று எதிர்க்க வேண்டும். முதுகுக்கு பின்னாடி பேசுபவர்கள் நாங்கள் கிடையாது. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். நான் யார் பக்கமும் இல்லை. அனைவருக்கும் பொதுவான நபராகவே செயல்படுகிறேன். அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிவிட்டேன்.
ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் இருந்து சிறைக்கு வந்த கடிதத்தில், நேரில் வந்து பதில் அளிக்கலாம், வழக்கறிஞர் மூலம் பதில் அளிக்கலாம், எழுத்து மூலம் பதில் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. நான் எழுத்து மூலம் பதில் அளிக்க முடிவு செய்து, ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். நாங்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தான் ஆசைப்பட்டோம். ஆனால் ஜெயலிலதா தான் இங்கு சிகிச்சை நன்றாக உள்ளது வெளிநாடு வேண்டாம் என்று தெரிவித்தார். சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என மருத்துவர்களிடம் கூறியதே ஜெயலலிதா தான்.
திமுக கொடுத்த வாக்குறுதிகளை செய்ய வேண்டும். விளம்பரம் செய்வது மட்டுமே ஆட்சி இல்லை. மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். இல்லை என்றால் மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.