ராகுல் காந்தி யாத்திரையில் சோனியா, பிரியங்கா இணைந்தனர்!

டெல்லியில் நடந்து வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது தாய் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் இணைந்து நடைப்பயணம் செய்து வருகின்றனர்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி பயணப்பட்டு வருகிறார். இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை காஷ்மீர் வரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரை 100 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இன்று காலை 6 மணிக்கு திலிவாலன் பகுதியில் இருந்து ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. ராகுல் காந்தி மற்றும் தலைவர்கள் டெல்லியை நோக்கி நடந்தனர். பதர்பூர் எல்லை வழியாக தலைநகர் டெல்லியை இந்த யாத்திரை அடைந்தது. ராகுல் காந்திக்கு டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். இந்த யாத்திரையின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கட்சி கொடியை கையில் ஏந்தி உற்சாகமாக அசைத்தனர்.

இந்த யாத்திரை மதுரா ரோடு ஜாகீர் உசேன் மார்க், இந்தியா கேட், திலக் மார்க், ஐடிஓ வழியாக ஆசிரமம் சென்று செங்கோட்டை செல்கிறது. அங்கு யாத்திரையின் முதல் பகுதி முடிவடைகிறது. இந்நிலையில் தான் இன்று காலை யாத்திரை அப்பல்லோ மருத்துவமனை அருகே சென்றது. அப்போது ராகுல் காந்தியுடன் அவரது தாய் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதோரா உள்ளிட்டவர்கள் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் உற்சாகமடைந்துள்ளனர். இந்த யாத்திரையில் காலையில் இருந்தவர்களை ஒப்பிடும்போது தற்போது பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து யாத்திரையில் பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் இணைந்து வருகின்றனர். இந்த யாத்திரையில் இன்று மட்டும் 40 ஆயிரம் பேர் இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்திருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் ஆரவாரம், உற்சாகத்துடன் பயணப்பட்டு வருகின்றனர்.

இன்று மதியம் 12 மணியளவில் இந்த யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவனும் ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் இன்று கைகோர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக ராகுல் பாத யாத்திரையில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அவரை சுற்றிலும் கயிறுகளை பிடித்தபடி யாரும் அருகில் நெருங்க முடியாத படி போலீசார் அணிவகுத்து வருவார்கள். ஆனால் இன்று பாதுகாப்பு முறையாக செய்யாததால் காங்கிரசார் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் தொண்டர்களே அரண் போல் நின்று யாத்திரையில் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் சென்ற பாதையின் இரு புறமும் மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தார்கள்.