5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு!

சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

2020ல் சீனாவில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளிலும் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பூசி மூலம் சிறிது சிறிதாககட்டுக்குள் வந்தன. அதுமட்டுமல்லாமல் உலக நாடுகளில் பலவிதமான மாற்றங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை அனைத்து வகையிலும் ஏராளமான மாறுதல் ஏற்பட்டன. கொரோனா வைரஸ் இரண்டாம் அலையும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், 2021ம் ஆண்டு தீவிரமாக பரவிய கொரோனா மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் உள்ளது.

இந்த நிலையில் சீனாவில் ஓமிக்ரானின் புதிய திரிபான பிஎப் 7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஹாங்காங், அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவிவருகிறது. இந்த புதிய உருமாற்ற வைரஸ் பெரும்பாலும் மேல் சுவாசக் குழாயை பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் ஆகியவை அறிகுறிகளாக கொண்டுள்ளன. இந்த வைரஸ் குஜராத் மாநிலத்தில் 3 பேருக்கும், ஒடிஸா மாநிலத்தில் ஒருவருக்கும் பரவியுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பிஎப் 7 வேரியண்ட் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்தியாவில் இன்று முதல் அனைத்து விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானங்களில் பயணம் செய்வோருக்கான பல கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில் சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவர் என்றும் மத்திய சுகாராரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணிகளில் 2 சதவிகிதம் பேருக்கு ரேண்டமாக டெஸ்ட் எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.