அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம்: ஓ.பன்னீர் செல்வம்!

தொண்டர் இயக்கமான அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகியையும், சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்கு வழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியையும் வீழ்த்துவோம் என எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செய்த பிறகு ஓ.பன்னீர் செல்வம் உறுதியேற்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த எம்ஜிஆர் திமுகவில் செயல்பட்டு வந்தார். திமுகவில் பொருளாளராக பதவி வகித்து வந்தார். அண்ணா மறைவுக்கு பிறகு அவருக்கும், மறைந்த முதல்வர் கருணாநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளிறேற்றப்பட்டார். இதையடுத்து எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். தொடர்ந்து 2 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். பள்ளியில் நடைமுறையில் இருந்த மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றி பெரும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் தான் எம்ஜிஆர் கடந்த 1987 டிசம்பர் 24ம் தேதி மறைந்தார். உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே வைக்கப்பட்டு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் எம்ஜிஆர் நினைவிடத்தில் இன்று அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். காலை 11 மணிக்கு ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து உறுதிமொழியேற்றார். அப்போது “அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும். அதிகாரத்தை கையாண்டு ஒருமுறை அனுபவப்பட்டவர்கள் வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத் துணியார். இதனை முளையிலேயே நசுக்கி ஒழிக்க வேண்டியது மக்களாட்சி முறையில் நம்பிக்கை கொண்டவர்களின் நீங்கா கடமையாகும் என அண்ணா கூறினார். மேலும் தொண்டர் இயக்கமான அதிமுகவை தன்வசமாக்கா நினைக்கும் துரோகியை வீழ்த்திட உறுதியேற்கிறோம். சட்டவிரோத பொதக்குழு மூலம் குறுக்கு வழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம்” என உறுதிமொழியேற்றனர்.