உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி – பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று தொலைபேசியில் உரையாடினர்.
பல ஆண்டுகளாக உக்ரைன் நாட்டை ரஷ்யா சொந்தம் கொண்டாடி வருகிறது. உக்ரைன் நாட்டின் கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளிட்டவை ஒத்துப் போவதால், அந்நாடு, தங்களுக்கு தான் சொந்தம் என, ரஷ்யா உரிமை கோரி வருகிறது. ஆனால் இதற்கு உக்ரைன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தனது நாட்டுப் படைகளுக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். ஜி – 20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினேன். ஜி – 20 தலைமையை ஏற்ற இந்தியா சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தேன். இந்த தளத்தில் தான் (ஜி – 20) நான் எனது அமைதி பார்முலாவை அறிவித்தேன். தற்போது அந்த பார்முலாவை அமல்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை நான் நம்புகிறேன். மனிதாபிமான உதவிக்கும், ஐ.நா.வில் ஆதரவுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்து உள்ளார்.