வணிகர் நலனை காப்பதில் அக்கறை கொண்டது திமுக!: முதல்வர் ஸ்டாலின்

திருச்சியில் வணிகர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

திருச்சியில் இன்று 39வது வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழக வணிகர் விடியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தியது. கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை வணிகர்கள் செய்தனர். அரசுக்கு உதவிய வணிகர்களுக்கு நன்றி சொல்லவே இங்கு வந்துள்ளேன். திருச்சி என்றாலே திருப்புமுனை வணிகர்களுக்கு நல வாரியம் அமைத்து பல்வேறு உதவிகளைச் செய்தது திமுக அரசு. வணிகர்கள் நலனைக் காப்பதில் மிகவும் அக்கறை கொண்ட அரசு திமுக. தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை உருவாக்கியவர் கருணாநிதி தான். திமுகவிற்கு எப்போதும் திருப்புமுனை அளிப்பது திருச்சி தான். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களுக்கான உதவிகளைச் செய்தது திமுக. இந்த ஆட்சி வணிகர்களின் நலனைப் பேணும் ஆட்சியாக எப்போதும் திகழும்.

அதிமுக அரசு கொண்டுவந்த நுழைவு வரியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் கைது செய்யப்பட்டார்கள். வணிகர்களின் நலன் காக்கப்பட்டதால்தான் அரசுக்கு வரும் வருவாய் காக்கப்படும். வணிகர்கள் இறந்தால் நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ஒரு லட்ச ரூபாயில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும். வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பித்தால் போதும். வணிக நலன் வாரியம் சீரமைக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தோம். அதன்படி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டது. தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தின் கீழ் படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பின்னர், வரிவிதிப்பு முறைகளை மாற்றும்படி ஜிஎஸ்டி மன்றத்தில் திமுக சார்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.