மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரியில் இன்று அதிமுக பந்த்!

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் தனிமாநில அந்தஸ்து கோரிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் தான் புதுச்சேரியை தனிமாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பல முறை அங்குள்ள சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் கூட மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது புச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழ தொடங்கியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகின்றனர்.

இதேபோல் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அதிமுக தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுபற்றி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் சமீபத்தில் கூறுகையில், ‛‛மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தபோது மாநில வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருந்தது. வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்தால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் துணைநிலை ஆளுநர், முதல்வருக்கு தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது வளர்ச்சி தடைப்படுகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என 1998ல் ஜெயலலிதா, பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் வலியுறுத்தி கொள்கை முடிவை அறிவித்தார். இது கைவிடப்பட்டது. பல்வேறு அமைப்புகள் மாநில அந்தஸ்து தொடர்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” என்றார். மேலும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு செய்தார். இந்த முழு அடைப்பு போராட்டம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் நடத்தப்படும் . முழு அடைப்புக்கு அனைத்து அமைப்புகள், கட்சிகள், பேருந்து உரிமையாளர்கள், வணிகர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து இன்று காலை புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் துவங்கியது. இந்த முழு அடைப்பு போராட்டத்தால் காலையில் இருந்தே கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மேலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. தனியார், அரசு பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயங்கும் பஸ்கள் இயங்கவில்லை. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயங்கும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து சென்னையில் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் திண்டிவனம் வழியாக மாற்றுபாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுகவின் மாநில செயலாளர் அன்பழகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.