நடிகை தன்யாவை திருமணம் செய்ததை ஒப்புக்கொண்ட பாலாஜி மோகன்!

நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை திருமணம் செய்தது உண்மைதான் என இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை பூர்விகமாக கொண்டவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் ஹீரோயின்களின் தோழியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கவுதம் மேனின் நீதானே என் பொன் வசந்தம், அட்லியின் ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை தன்யா பாலகிருஷ்ணா.

இந்நிலையில் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவும் இயக்குநர் பாலாஜி மோகனும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு நடிகையான கல்பிகா கணேஷ் தெரிவித்திருந்தார். மேலும் தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்த போதே இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் இருவரும் அதன் பிறகு தொடர்ந்து டேட்டிங்கில் இருந்ததாகவும் தெரிவித்தார் கல்பிகா கணேஷ். அதோடு தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் கணவன் மனைவியாக நடித்த இருவரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி பகீர் கிளப்பினார். மேலும் பாலாஜி மோகனின் கட்டுப்பாட்டில் உள்ள தன்யா பாலகிருஷ்ணா படங்களின் புரமோஷன்களில் பங்கேற்பதில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். கல்பிகா கணேஷ், தன்யா பாலகிருஷ்ணா மற்றும் பாலாஜி மோகன் குறித்து பேசியிருந்த இந்த யூட்யூப் வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது. இதையடுத்து தன்யாவும் பாலாஜி மோகனும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தனது வீடியோவை யூட்யூட்டிபில் இருந்து நீக்கிவிட்டதாக கூறினார் கல்பிகா கணேஷ்.

இந்நிலையில் இயக்குநர் பாலாஜி மோகன், தானும் தன்யா பாலகிருஷ்ணாவும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என தெரிவித்துள்ளார். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும் என இயக்குநர் பாலாஜி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் திருமணமான தகவலை ஒப்புக்கொண்டுள்ளார். அந்த மனுவில் இயக்குநர் பாலாஜி மோகன் கூறியிருப்பதாவது:-

நான் காதலில் சொதப்புவது எப்படி, மாரி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன். ஏழாம் அறிவு, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணாவை கடந்த ஜனவரி 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில் தெலுங்கு வெப் சீரிஸ்களில் நடித்து வரும் கல்பிகா கணேஷ் என்பவர் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யூட்யூப்பில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் தங்களைப்பற்றி அவதூறு வெளியிட்டதற்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தன்யா பாலகிருஷ்ணா மற்றும் பாலாஜி மோகன் குறித்து பேச கல்பிகா கணேஷுக்கு தடை விதித்துள்ளது. மேலும் இதுகுறித்து கல்பிகா ஜனவரி 20ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் பாலாஜி மோகனும் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவும் திருமணம் செய்து கொண்ட தகவல் நடிகை கல்பிகா கணேஷின் மூலம் சுமார் 11 மாதங்களுக்கு வெளியாகியுள்ளது.