மதுரை விமான நிலையத்தில் நடிகர் சித்தார்த்துக்கு நடந்த அவமானம்!

மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பாஜக அரசின் ஒரு நாடு, ஒரு மொழி கொள்கைக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அண்மைக்காலமாக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில்தான் கடிதங்கள் எழுதி வருகின்றார்கள். இந்தப் போக்கு தமிழுக்கு மட்டும் அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் எதிரானது என்பதால் இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகள் மூலம் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதற்கிடையே, தமிழக அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்தி தெரியாத காரணத்தால் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை தெரிவித்ததன் மூலம் இந்தி திணிப்பு விவகாரம் தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பூதாகரமாகியது. தமிழக இளைஞர்கள் நவீன காலத்துக்கு ஏற்ப இந்தி திணிப்புக்கு எதிராக இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்குகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகினர். ஆனாலும், இந்தி திணிப்பு சம்பவங்கள் அதிகார தொனியில் ஆங்காங்கே நடந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில், மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகர் சித்தார்த் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். நடிகர் சித்தார்த் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கிரைன் சரிந்து விபத்து, பட்ஜெட் பிரச்சனை போன்ற காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. கமலின் விக்ரமன் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து லைக்கா நிறுவனத்துடனான பிரச்சனை பேசி முடிக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் நடிகர் சித்தார்த் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மதுரை விமான நிலையம் வந்த எனது வயதான பெற்றோரின் உடமையை சோதனை செய்த சிஐஎஸ்எப் வீரர்கள் அவர்கள் பையில் இருந்த சில்லறைகளை சோதனையின்போது வெளியே எடுக்கும்படி சொல்லியுள்ளனர். என் பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது தங்களிடம் இந்தியில்தான் பேச வேண்டும் என்று அவர்கள் கட்டாயமாக வற்புறுத்தியுள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் தன்னுடைய வயதான பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார். சித்தார்த்தின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோருக்கு நேர்ந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சித்தார்த்தின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென இந்திய விமான நிலைய ஆணையத்தை – மதுரை கோரியுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த், கொரோனா இரண்டாவது அலை இந்திய நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த போது மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர் கட்சிகளும் விமர்சித்து இருந்தார். திரையுலக பிரபலங்கள் அனைவரும் மௌனமாக இருந்த போது நடிகர் சித்தார்த் மட்டும் சமூக வலைதலங்களில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் அவருக்கு பல கொலை மிரட்டல்களும் வந்தன.