பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர். இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15 கிலோ கண்ணிவெடி குவியலை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து அழித்தனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய நாசவேலைக்கு முயற்சி செய்தது. இதன் மூலம் தெரியவந்தது. இதையடுத்து காஷ்மீர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் காஷ்மீரில் சிட்ரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் காரில் ஊடுருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது 4 பயங்கரவாதிகள் ஒரு வாகனத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். பயங்கரவாதிகளை உயிருடன் பிடிக்க பாதுகாப்பு படையினர் முதலில் முயற்சி செய்தனர். ஆனால் பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர். காலை 7.30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கி சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. 8.30 மணி அளவில் பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து சுடுவது நின்றது. அதன்பிறகு அந்த வாகனத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.