ஊழல் செய்வதில் சூப்பர் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்: எடப்பாடி பழனிசாமி

ஊழல் செய்வதில் சூப்பர் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில பேசிய முன்னாள் முதலமைச்சரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:-

ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையும் வகையில் தொடங்கப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டம் அதிமுக ஆட்சியில் நிறைவடையும் தருவாயில் இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகியும் இதுவரை அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால், திட்டத்தை உடனடியாக நிறைவேற்றினால் எங்களுக்கு பெயர் கிடைத்து விடும் என்பதற்காக திமுக அரசு கிடப்பில் போட்டு விட்டது. எப்போது நிறைவேற்றினாலும் திட்டத்தை யார் கொண்டு வந்தார் என்பதை மக்களின் மனதில் இருந்து அழித்து விட முடியாது.

இதேபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகள் இணைப்பு திட்டமும் கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஊழல் செய்வதில் சூப்பர் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். மக்கள் நலனில் அக்கறை இல்லாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். ராஜ பரம்பரை போல அவருடைய மகனுக்கு முடிசூட்டி விட்டார். ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் கருணாநிதி குடும்பம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அமைச்சரானதும் உதயநிதி ஊர் ஊராக சென்று வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய அமைச்சரான ஐ. பெரியசாமியின் அரசியல் அனுபவம் கூட உதயநிதியின் வயதாக இல்லை. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஐ.பெரியசாமி, உதயநிதி திட்டத்தை தொடங்கி வைக்கும்போது, அருகில் நின்று வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். சேலத்தின் பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு, உதயநிதி மட்டுமல்ல அவருடைய மகன் இன்பநிதி அமைச்சரானால் கூட வரவேற்போம் என்று கூறியிருக்கிறார். அடிமைத்தனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட அமைச்சர்களால் பொதுமக்களுக்கு எந்த அளவிற்கு நன்மை கிடைக்கும்.

அதிமுக ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டபோது திமுக கடுமையாக எதிர்த்தது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய 2-வது சாலை திட்டமாக இது அமைந்திருக்கும். விவசாயிகளை பாதிக்காத வகையில் நிலம் எடுக்கப்பட்டது. வழக்கமான இழப்பீட்டை விட 4 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டது. மரங்கள், கிணறுகள், வீடுகள் என தனித்தனியே மதிப்பீடு செய்யப்பட்டது. 92 சதவீத விவசாயிகள் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், 8 சதவீத விவசாயிகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் தூண்டி விட்டு திட்டத்தை நிறுத்தி விட்டனர். ஆனால் இப்போது 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஆட்சியில் இல்லாத போது எதிர்த்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இரட்டை வேடம் போடுகின்றனர். ஒரு திட்டம் கொண்டு வரும்போது வேண்டும் என்றே எதிர்ப்பதுதான் திராவிட மாடல். இதேபோன்று சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட ராணுவ உதிரிப்பாக உற்பத்தி தொழிற்சாலை, சர்வதேச தரத்தில் பஸ்போர்ட் அமைக்கும் திட்டத்தையும் திமுக அரசு கிடப்பில் போட்டு விட்டது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.