அஞ்சலி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். இந்நிலையில், திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது குறித்து அஞ்சலி மனம் திறந்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்கும் நடிகைகள் மத்தியில், சரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடி அஞ்சலி. 2007ம் ஆண்டு ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் அஞ்சலி. முதல் படத்திற்கே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்ற அவர், அடுத்து வசந்தபாலனின் அங்காடித் தெரு படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி போன்ற படங்களில் அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது வெப் சீரிஸ்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி, நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக படங்களில் நடிக்க மறுத்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது அதுகுறித்து விளக்கம் கூறியுள்ளார் அஞ்சலி. சமீபத்தில் அஞ்சலி கொடுத்துள்ள ஒரு பேட்டியில், தான் தவறான உறவில் இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகர் ஜெய்யுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர்களது காதல் தோல்வியில் முடிந்ததாக சொல்லப்படுகிறது. பெயரை குறிப்பிடாமல் ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதாக அஞ்சலி கூறியுள்ளார். மேலும் அது தவறான உறவு எனவும் அஞ்சலி மனம் திறந்து தெரிவித்துள்ளார். தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என்றும் அழுத்தமாக கூறியுள்ளார் அஞ்சலியின் இந்த பேட்டி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.