சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்பவும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வருவாய் இழப்புக்கு ஏற்ப அதை சரிக்கட்டும் வகையில் விலை உயர்வை அறிவிக்கின்றன. அந்த வகையில் கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து விற்பனையாகி கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை 250 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அதன் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை 2,355 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை அனைத்தும் உயர்ந்து விட்டன. ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டன.

இந்த நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இன்று திடீரென வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளன. சிலிண்டருக்கு 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வு இன்றே அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.965 ஆக இருந்தது. 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதால் சிலிண்டர் விலை ஆயிரத்தை கடந்து உள்ளது. இனி ஒரு சிலிண்டர் சமையல் கியாசுக்கு பொதுமக்கள் 1,015 ரூபாய் கொடுக்க வேண்டும். அதே சமயத்தில் மானியம் பெறுவது குறைந்து கொண்டே இருக்கிறது. சிலிண்டருக்கு 25 ரூபாய் கூட யாருக்கும் மானியம் கிடைப்பது இல்லை. ஆனால் சிலிண்டர் விலை மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். சாதாரண ஏழை-எளிய மக்களை இந்த விலை உயர்வு மிக கடுமையாக பாதிக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றால் பொதுமக்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது சமையல் கியாஸ் விலை உயர்வதால் இது தங்களுக்கு மேலும் கூடுதல் சுமையாக இருக்கும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில் சமையல் எரிவாயு விலையை திரும்ப பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

1. சமையல் எரிவாயு விலை மீண்டும் உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.1015.50 ஆக அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இது கூடுதல் சுமையாகும்.

2. சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டில் 10 தவணைகளில் ரூ.305 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 44% உயர்வு ஆகும். மிக மிக அத்தியாவசியப் பொருளான சமையல் எரிவாயு விலை ஒரே ஆண்டில் 44% உயர்த்தப்படுவதை ஏற்க முடியாது. இதை ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது!

3. ஒரு காலத்தில் சமையல் எரிவாயு விலை 400 ரூபாயைத் தாண்டக் கூடாது என்பதற்காக மானியத் தொகை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. 2018-ஆம் ஆண்டு நவம்பரில் மானியத்தின் அளவு ரூ.435 என்ற உச்சத்தை தொட்டது. ஆனால், இப்போது மானியம் ரூ.24.95 ஆக குறைக்கப்பட்டு விட்டது!

4. ஒரு புறம் விலை அதிகரிக்கும் நிலையில், மறுபுறம் மானியம் குறைக்கப்படுவது இரட்டைத் தாக்குதலாக அமைந்து விடும். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்; மானியத்தின் அளவை படிப்படியாக உயர்த்த வேண்டும்! இவ்வாறு ராமதாஸ் தனது ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.