ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ சேவைகளை எளிமைப்படுத்த ‘பிரதமர்-வானி’ திட்டம்!

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ சேவைகளை எளிமைப்படுத்த ‘பிரதமர்-வானி’ திட்டத்தை ரெயில்டெல் தொடங்கியது.

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பொது ‘வை-பை’ சேவைகளை எளிமைப்படுத்த ‘பிரதமர்-வானி’ என்ற திட்டத்தை ரெயில்டெல் தொடங்கியது. நாடு முழுவதும் 6 ஆயிரத்து 102 ரெயில் நிலையங்களில் பொது வைபை சேவை இலவசமாக கிடைத்து வருகிறது. பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல், இந்த சேவையை அளித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த சேவையை மேலும் எளிமைப்படுத்தவும், அகண்ட அலைவரிசையை மக்கள் பயன்பாட்டுக்கு மேலும் பரவலாக்கவும் ‘பிரதமர்-வானி’ என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அனைத்து வைபை சேவைகளையும் இணைக்க மத்திய தொலைத்தொடர்புத்துறை இத்திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதை செயல்படுத்த ரெயில்டெல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 100 ரெயில் நிலையங்களில் பொது வைபை சேவைகளை பயன்படுத்த ‘பிரதமர்-வானி’ திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. ரெயில்டெல் தலைவரும், நிர்வாக இயக்குனருமான புனீத் சாவ்லா நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இதை தொடங்கி வைத்தார்.

வருகிற ஜூன் மாதத்துக்குள், தற்போது வைபை வசதி உள்ள மொத்தம் 6 ஆயிரத்து 102 ரெயில் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று புனீத் சாவ்லா தெரிவித்தார். இத்திட்டத்தை பயன்படுத்த ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் அடிப்படையிலான ஸ்மார்ட்போனில் கூகுள் பிளேஸ்டோருக்கு சென்று, ‘வி-டாட்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.