வினாத்தாள் வெளியான விவகாரம்: ஆந்திர முன்னாள் மந்திரி கைது!

ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மந்திரி நாராயணா கைது செய்யப்பட்டார்.

ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் நடந்தது. அப்போது சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் கணிதம் உள்ளிட்ட தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் முன்னதாகவே சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் சில தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலம் தங்கள் கல்வி நிறுவனத்துக்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் திருப்பதியில் உள்ள நாராயணா கல்வி நிறுவனங்களிலிருந்து கேள்வித்தாள்கள் முறைகேடாக வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள் நடத்தும் நாராயணா கல்விக் குழுமத்திற்கு இந்த விவகாரத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதேபோல் மேலும் பல தனியார் கல்வி நிறுவனங்களும் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து திருப்பதியில் உள்ள நாராயணன் கல்வி நிறுவனத்தின் முதல்வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நாராயணா கல்வி குழுமத்தின் தலைவரான முன்னாள் தெலுங்கு தேசம் கட்சி மந்திரி நாராயணவை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். தொடர்ந்து கடந்த 10 நாட்களாக விசாரணை மேற்கொண்ட போலீசார் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கே.பி.எச் பகுதியில் உள்ள நாராயணா வீட்டிற்கு அவரையும், அவரது மனைவியையும் விசாரணைக்காக அழைத்து வந்தனர். பின்னர் 2 பேரிடம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக முன்னாள் மந்திரி நாராயணவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.