கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு!

கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு தொண்டையாடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஏராளமான காலியிடங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இங்குள்ள ஒரு இடத்தை அளப்பதற்காக உரிமையாளர் சென்று உள்ளார். அப்போது அருகில் உள்ள இடத்தில் ஒரு அட்டை பெட்டி கிடந்தது. அதை திறந்து பார்த்தார். அதில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றி விசாரித்தனர். மொத்தம் 266 துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட 22 ரக குண்டுகள் என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட இடத்தில் துப்பாக்கி பயிற்சி எடுத்ததற்கான ஆதாரங்களும் கிடைத்தன. இது குறித்து அறிந்ததும் கோழிக்கோடு நகர போலீஸ் கமிஷனர் அக்பர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

அந்த இடத்திற்கு சந்தேகப்படும்படியாக யாராவது வந்தார்களா? என்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இரவு நேரங்களில் கார்களில் சிலர் வந்து செல்வது உண்டு என்றும், ஆனால், துப்பாக்கியால் சுடும் சத்தம் எதையும் கேட்கவில்லை என்றும் அந்த பகுதியினர் கூறினர். தீவிரவாதிகள் பயிற்சி எடுப்பதற்காக துப்பாக்கி குண்டுகளை அங்கு கொண்டு வந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.