பழங்குடியினருடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனம்!

உதகமண்டலம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்மண்ணின் பூர்வகுடிகளாக தோடர் பழங்குடியினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த வரவேற்பின் போது தோடர்களுடன் இணைந்து அவர்களது பாரம்பரிய இசைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடனமாடினார்

உதகமண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். உதகையில் இன்று தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். உதகையின் 200-வது ஆண்டை முன்னிட்டு வெளி உலகத்துக்கு இந்த சுற்றுலா நகரை அறிமுகம் செய்த ஜான் சலிவன் உருவ சிலையை நாளை முதல்வர் திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகை சென்றார் முதல்வர். அவர் சென்ற வழியெங்கும் பொதுமக்களும் திமுகவினரும் பெரும் எண்ணிக்கையில் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், உதகையில் கேட்ட குரல்: “நல்லா இருக்கீங்களா?, உடம்ப பாத்துக்கோங்க! ஆட்சி சூப்பர்!’ அதிலும் ஒரு பெண்,”நான் கருவுற்று இருக்கேன், என்னை வாழ்த்துங்க” – கேட்டபோது உருகினேன்! என்றும் மக்களிடம் செல்! மக்களோடு வாழ்! என பதிவிட்டிருந்தார்.

குன்னூரில் இருந்து உதகை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மந்து என்ற இடத்தில் தோடர் பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பெரும் எண்ணிக்கையில் பாரம்பரிய உடைகளுடன் தோடர் பூர்வகுடிகள் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர். அப்போது தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனமாடினார். முதல்வர் தங்களுடன் இணைந்து நடனமாடியதற்கு தோடர் பூர்வகுடிகள் நன்றி தெரிவித்தனர்.