நெல்லையில் மகனுடன் கல்குவாரி உரிமையாளர் கைது!

நெல்லையில் 3 பேரை பலிகொண்ட விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் மகனுடன் கைது செய்யப்பட்டார். பாறையை வெடி வைத்து தகர்த்து 6-வது நபரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

நெல்லை அருகே அடைமதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் முருகன், விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். செல்வம், மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. கல்குவாரி விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார், ஏற்கனவே கல்குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன், மேலாளர் ஜெபாஸ்டின் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கல்குவாரி குத்தகைக்கு நடத்தி வரும் உரிமையாளரும், காங்கிரஸ் பிரமுகரும், திசையன்விளை நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவருமான சேம்பர் செல்வராஜ், அவருடைய மகன் குமார் ஆகியோரை தேடி வந்தனர்.

தந்தை-மகனை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினா். 2 பேரையும் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் சேம்பர் செல்வராஜ், குமார் ஆகியோர் குறித்து பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சேம்பர் செல்வராஜ், குமார் ஆகியோர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மங்களூருவுக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்த சேம்பர் செல்வராஜ், அவருடைய மகன் குமார் ஆகியேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து தனிப்படை போலீசார், வேனில் நெல்லைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இதற்கிடையே, பாறை இடிபாடுகளில் சிக்கிய 6-வது நபரான ராஜேந்திரனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். அவர் பெரிய அளவிலான பாறையின் நடுவில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் மீட்பு படையினர் நேற்று முன்தினம் இரவு அந்த பாறையில் டிரில்லர் எந்திரம் கொண்டு 32 இடங்களில் துளை போடும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நேற்று காலை மீட்பு படையினர் முதற்கட்டமாக அந்த துளைகளில் சுமார் 3½ கிலோ ஜெலட்டின் குச்சிகளை வெடிகளாக செலுத்தி வெடிக்க செய்தனர். இதற்காக போலீசார் குவாரியை சுற்றி இருந்தவர்களை ½ கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் பாறை பல துண்டுகளாக வெடித்து சிதறியது. அதனை தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. இந்த பணி இரவு வரை நீடித்தது.

இந்நிலையில் திசையன்விளையில் உள்ள குமார் வீட்டை போலீசார் நேற்று முன்தினம் சோதனையிட சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்ததால் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை செய்ய போலீசார் முயன்றனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் குமார் வீட்டு வழியாக அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சுபாஷ் என்பவர் சென்றார். அப்போது குமார் வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அவர் குமாரின் உறவினர்களிடம் தெரிவித்தார். மேலும் திசையன்விளை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார், குமார் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் குமார் வீட்டின் முன்பக்க கதவை கடப்பாறை, அம்மிக்கல்லால் உடைத்து உள்ளனர். வீட்டில் உள்ள அறைகளும் திறந்து கிடந்துள்ளது. அறைகள் முழுவதும் மிளகாய் பொடியும் தூவப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவும் அகற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து குமார் உறவினர் தங்க பிரபாகரன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். எனினும் வீட்டில் ஏதாவது திருட்டு போய் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.