சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள முத்தொரை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று நடந்தது. இந்த திட்டத்தையும், முகாமையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார். இந்த திட்டத்தின் நோக்கம் தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் ஆரோக்கியத்துடனும், நலமுடன் வளர்க்க வேண்டும் என்பதே ஆகும்.

ஊட்டியில் இன்று தொடங்கியுள்ள இந்த திட்டமானது தமிழகம் முழுவதும் ஒரு மாத காலத்திற்குள் செயல்படுத்தபட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மருத்துவ உதவி தேவை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தனியாக பிரிக்கப்படுகிறது. அவர்களில் கடுமையான, மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை அளிப்பதுடன், சிறப்பு ஊட்டச்சத்தும் வழங்கப்படுகிறது. மருத்துவ உதவி தேவையானவர்களுக்கு தேவையான சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பிறந்தது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உயரம், எடை கண்காணிக்கும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் 37 லட்சம் குழந்தைகளை பரிசோதித்தில், 2 லட்சம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடனும், 7 லட்சம் பேர் மிதமான பாதிப்புடனும் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க ஊட்டச்சத்து வழங்கப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை ஊட்டிக்கு வந்தார். நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்களை பார்வையிட்ட அவர் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டார். மேலும் கண்காட்சியை யொட்டி நடந்த பரத நாட்டியம், பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியையும் அவர் கண்டு ரசித்தார்.

மாலையில் ஊட்டி விருந்தினர் மாளிகையில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று, அங்குள்ள ராணுவ போர் சின்னத்திற்கு மரியாதை செய்தார். அவருக்கு, கல்லூரியில் அளிக்கப்படும் பயிற்சி முறை குறித்து வீடியோவாக காண்பிக்கப்பட்டது. இன்று காலை ஊட்டியில் ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஊட்டி உருவாகி 200-வது ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் முக்கோண சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ஊட்டியின் முதல் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். அதன்பின்னர் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த ஊட்டி 200-வது ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ரூ.34 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் மாவட்டத்தில் ரூ.56 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 28 முடிவுற்ற பணிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து 9,500 பயனாளிகளுக்கு, ரூ.28 கோடியே 13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் விழாவில் அவர் பேரூரையாற்றினார்.

இன்று நடந்த விழாவில் மட்டும் மொத்தம் ரூ.118 கோடியே 79 லட்சம் மதிப்பிலான அரசு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டி 200-வது ஆண்டு விழா கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து விழா அரங்குக்கு சென்ற முதல்-அமைச்சர் அங்கிருந்த மாற்று திறனாளிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், குறும்பர் பழங்குடியினர் ஓவியத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து ஊட்டி 200-வது ஆண்டு விழா மலர் மற்றும் ஜான் சல்லிவன் பற்றிய கருத்துக்கள் அடங்கிய புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பெற்றுக்கொண்டார். விழாவில் ஆ.ராசா எம்.பி., அமைச்சர்கள் ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட செயலாளர் முபாரக் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.