தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: டிஜிபி

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் கள்ளச்சாராயம் இல்லாத நிலை உருவாக்கப்படும். மாணவர்கள் இடையேயான மோதல்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோக்களை அழைத்து பேசுகிறோம்; மீறினால் வழக்கு பதியப்படுகிறது.

காவல்நிலைய மரணங்களை தடுப்பது தொடர்பாக திருச்சியில் போலீசாருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படும். காவல்நிலைய மரணத்தை தடுப்பது பற்றி மத்திய மண்டல போலீசாருக்கு டிஜிபி உள்ளிட்டோர் அறிவுரை தந்தனர். காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மட்டுமே குற்றவாளிகள் இறந்தார்கள் என்று சொல்லமுடியாது. உடல்நிலை சரியில்லாமல் கூட சிலர் இறந்து விடுகிறார்கள், சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காவல்நிலைய மரணங்கள் கூடாது, போலீஸ் வன்முறையை கையாளக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தேவைபப்டும் போது பலத்தை போலீஸ் பயன்படுத்தலாம்; குற்றவாளிகள் போலீசை பார்த்து பயப்பட வேண்டும். மக்கள் தாக்கினால் தற்காத்துக் கொள்ள போலீசாருக்கு கராத்தே வர்ம கலைகள் கற்று தரப்பட்டுள்ளன. தேசிய மனநல பயிற்சி மையத்திலிருந்து 300 காவலர்கள் பட்டய சான்றிதழ் பெற்றுள்ளனர். அவர்களை கொண்டு காவல் நிலையில் பயிற்சிகள் வழங்கப்படும். காவல்துறையில் புதிதாக 10 ஆயிரம் போலீசார் பணியில் சேர உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.