நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த மசோதாவை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பாமல் வைத்துள்ளதால் சட்டசபையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அனைத்துக்கட்சி கூட்டத்திற்குப் பிறகு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி:
- நீட் விலக்கு தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்.
- மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது.
- நீட் தேர்வு 12 ஆண்டு பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக்குகிறது.
- நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும்.
முதல்வர் ஸ்டாலின் உரை
நீட் தேர்வுக்கு ஏழை மாணவர்களால் பயிற்சி பெற முடியாது. அதனால்தான் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். நீட் தேர்வு- சட்டசபையின் முடிவை ஆளுநர் மதிக்க வேண்டும். சட்டசபையின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதே மக்களாட்சியின் தத்துவம். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒரு வரைவுத் தீர்மானத்தை எடுத்துரைப்பார். நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைத்துக் கட்சி கூட்டத்தின் இலக்காகும். எனவே,வரைவுத் தீர்மானத்தின் மீது உங்களது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.