இலங்கையில் மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, மந்திரிசபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இலங்கையில் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தநிலையில், கடந்த 9-ந் தேதி, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, கடந்த 12-ந் தேதி பதவி ஏற்றார். இலங்கையில் 19-வது அரசியல் சட்ட திருத்தம் மூலம், அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டு இருந்தன. கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆனவுடன், அதை ரத்து செய்து, 20ஏ அரசியல் சட்ட திருத்தம் மூலம் நாடாளுமன்றத்தை விட அதிபருக்கு அளவற்ற அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. அதிபருக்கு எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில், அவரது அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. இதற்காக 21-வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கான மசோதா, நேற்று இலங்கை மந்திரிசபையின் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி எம்.பி.க்கள் திடீரென அம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். மசோதாவை அதே வடிவத்தில் ஏற்க முடியாது என்றும், முதலில் அட்டார்னி ஜெனரலின் ஒப்புதலை பெற்ற பிறகு மந்திரிசபையின் பரிசீலனைக்கு முன்வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இதனால், நேற்று இந்த மசோதா, மந்திரிசபையின் பரிசீலனைக்கு வரவில்லை.
அதிபரின் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சேவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்பேரில்தான் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்றார். இதனால், இது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த மசோதா, அதிபரின் அதிகாரத்தை குறைப்பதுடன், பல்வேறு ஆணையங்களை சுதந்திரமாக செயல்பட வழிவகுக்கக்கூடியது. ரணில் விக்ரமசிங்கே மந்திரிசபையில், கடந்த 20-ந் தேதி 9 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இந்தநிலையில், நேற்று மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இவர்கள் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா, இலங்கை சுதந்திரா கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகியவற்றை சேர்ந்தவர்கள். ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, மீன்வளத்துறை மந்திரியாக பதவி ஏற்றார். இவர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.