தனியார்மயத்தை எதிர்த்து, மின் துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் கடந்த பிப்., 1ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால் வேலை நிறுத்த போராட்டத்தை நிறுத்தினர். இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். வம்பா கீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டக்குழு தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். மதியம் 12.00 மணிக்கு மேல் மின் துறையில் எழுத்துப்பணி, மீட்டர் ரீடிங், புதிய மின் இணைப்பு வழங்குதல் பணிகளை புறக்கணித்தனர்.
போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச் செயலாளர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு அளித்த வாக்குறுதியை மீறி மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமைச்சரவை முடிவெடுத்து, மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நாங்கள் வேறு வழியின்றி மீண்டும் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். அதேநேரத்தில் பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்குவோம். பொதுமக்களை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் எங்களின் போராட்டம் இருக்கும். பொறியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டும் செய்வர். கூடுதல் பணிகளை பார்க்க மாட்டார்கள். எழுத்துப் பணிகளை முற்றிலுமாக தவிர்க உள்ளோம். மீட்டர் ரீடிங் எடுக்க மாட்டோம். புதிய மின் இணைப்பு தரமாட்டோம். அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் போராட்டம் தீவிரமடையும். போராட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மின்துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளதால் மின் துறையின் முக்கிய பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.