ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கை விற்க ஒப்புதல்!

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்துள்ள 29 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு, நிகழ் நிதியாண்டில் மத்திய அரசின் முதலீடுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன பங்குகளை விற்பதன் வாயிலாக மத்திய அரசு ரூ.65,000 கோடி வரை திரட்ட திட்டமிட்டிருந்தது.
தற்போது 124.96 கோடிக்கும் அதிகமான 29 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் பட்சத்தில் நடப்புச் சந்தை விலையில், அரசுக்கு ரூ.38,000 கோடி வருவாய் கிடைக்கும் என தெரியவருகிறது.

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் கடந்த 2002 வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. பின்னா், கடந்த 2002 ஏப்ரலில் 26 சதவீத பங்குகளை ஸ்டொ்லைட் ஆப்பா்சூனிட்டிஸ், வென்ட்சா்ஸ் நிறுவனத்துக்கு (எஸ்ஓவிஎல்) ரூ.445 கோடிக்கு மத்திய அரசு விற்பனை செய்தது. இதன்மூலம் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் வேதாந்தா குழுமத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. அதன்பின்னா் வேதாந்தா குழுமம் சந்தையிலிருந்து 20 சதவீத பங்குகளும், கூடுதலாக 18.92 பங்குகளை மத்திய அரசிடமிருந்தும் கடந்த 2003-இல் வாங்கியது. இதன் வாயிலாக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் வேதாந்தா குழுமத்தின் பங்கின் மதிப்பு 64.92 சதவீதத்தை எட்டியது.