சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா.
உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்’ செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் சதுரங்கப் போட்டி பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா (16 வயது) அரையிறுதிக்கு முன்னேறினார். அதில் நெதர்லாந்தைச் சேர்ந்த அனீஷ் கிரி உடன் மோதினார். இருவரும் விடாப்பிடியாகப் போராடியதால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. அதில் பிரக்ஞானந்தா 1.5 – 0.5 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். பைனலில் அவர் உலகின் 2ம் நிலை வீரரான டிங் லிரெனை (சீனா) எதிர்கொண்டார். இறுதிப் போட்டி 2 நாட்களாக நடைபெற்றது. இறுதிப் போட்டியின் முதல் நாளான நேற்று உலகின் நம்பர் 2 செஸ் வீரர் டிங் லிங்கிரனிடம் தோல்வி அடைந்து இருந்த பிரக்ஞானந்தா இரண்டாம் நாள் போட்டியில் வெற்றி பெற்று டை பிரேக்கர் முறைக்கு எடுத்து சென்றார். இறுதியாக டை பிரேக்கர் முறையில் வெற்றி வாய்ப்பில் இருந்தும் ஒரு தவறான நகர்த்தலால் பிரக்ஞானந்தா தோல்வியை சந்தித்தார். இதனால் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார்.
இதனிடையே உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் நேற்று அதன் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா மற்றும் ஐஓசியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சி. அசோகன் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் முறைப்படி அந்நிறுவனத்தில் இணைந்தார். இப்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா 18 வயதை எட்டியதும் ஐஓசி நிறுவனத்தில் முறைப்படி இடம் பெறுவார். இணைப்பு விழாவில் பேசிய பிரக்ஞானந்தா, ஐஓசி சார்பில் இணைப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஐஓசியுடன் இருக்கும் பல செஸ் வீரர்களை நான் அறிவேன். அது அவர்களுக்கு எப்படி ஆதரவளிக்கிறது என்பது எனக்கு தெரியும். ஐஓசியில் இணைந்தது பெருமையாக உள்ளது. இது எனது செஸ் வாழ்க்கையில் எனக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்றார்.