காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கே மீண்டும் அடிக்கல்: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களே பிரதமா் மோடியால் மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னையில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்து உரையாற்றியுள்ளாா். சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் நான்கு வழி இரண்டடுக்கு சாலையின் செயல்திட்ட மதிப்பான ரூ.5,852 கோடி செலவில் 21 கி.மீ. தொலைவு சாலை அமைப்பதற்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறாா். இதே திட்டம் ரூ.1,655 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே அமைத்திட 2009 ஜனவரி 8-இல் முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில், பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 30 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் பொருந்தாதக் காரணம் கூறி, அந்தத் திட்டத்தை ஜெயலலிதா முடக்கிவிட்டாா். இந்தத் திட்டத்துக்கு மீண்டும் அடிக்கல் நாட்டியிருப்பது மிகுந்த வியப்பை தருகிறது.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் வழித்தடம், மதுரை – தேனி ரயில் வழித்தடம் திட்டம் போன்றவையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பரிசீலனையில் இருந்து தொடக்க வேலைகள் நடைபெற்று வந்தவையாகும். சென்னை – பெங்களூா் விரைவு வழிச்சாலை திட்டமும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன்பின் முடக்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.